Pages

என்னைப் பற்றி

நான் கபிலன் சச்சிதானந்தன்
Kapilan Sachchithananthan, Sri lanka.
Follow Me: @iamkapilan

Search Posts

Sunday, January 1, 2017

தர்ப்பணம் ,சிரார்த்தம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.

13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.
16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

17. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.

20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்று கருதப்படுகிறது.

21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

22. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.

23. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களை கொடுக்கும்.

24. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

27. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

28. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.

29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.

31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.

32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

33. மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும்.

Hindu Funeral Traditions
Tamil Funeral Traditions
Hindu Funeral Rites
How Tamil People do Funeral

No comments:

Post a Comment